மருத்துவமனைப் பிணிகள்
  
Translated

மருத்துவமனைப்பிணி — மருத்துவமனையிலோ அல்லது பிற சுகாதார நிலையத்திலோ அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் நுண்கிருமிப்பிணிகளால் பாதிக்கப்பட்டால் இது மருத்துவமனைப்பிணி என்று கூறப்படுகிறது. மருத்துவமனையில் பரவிய பிணிக்கு ஆங்கிலத்தில் மற்றொரு சொல் நோசோகோமியல் இன்ஃபெக்க்ஷன்ஸ் (nosocomial infections).

 

“மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் ஆகியவை நுண்கிருமிப்பிணிகள் அல்ல. நீங்கள் மருத்துவமனையில் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் தங்கிய பின் கபவாதம் போன்ற நுண்கிருமிப்பிணி ஏற்பட்டிருந்தால் மருத்துவமனைப்பிணிக்கு ஆளாகிவிட்டீர்கள் என்று மருத்துவர்கள் கருதுவார்கள்.” 

 

"மருத்துவமனைகளில் வாழும் நுண்ணுயிரிகளின் கொல்லிகள் எதிர்ப்பாற்றல் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக, மருத்துவமனைகளிலுள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனைப்பிணிகளால் சிக்கல்களும் இறப்புகளும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.”

Learning point

மருத்துவமனைப்பிணிகளை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?

 

ஒரு சாதாரண சிகிச்சைக்குக்கூட நாம் மருத்துவமனைகளில் தங்கியிருக்கும்போது எதிர்ப்பாற்றல் உடைய நுண்கிருமிகளால் தாக்கப்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. மருத்துவமனைகளுக்குள் கொல்லிகள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதால், இங்குள்ள கிருமிகளின் எதிர்ப்பாற்றல் வெளியே உள்ள நுண்ணுயிர்களை விட வேறுபட்டவை.

 

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையம் (சி.டி.சி.) தரவுகளின் படி, 2011ஆம் ஆண்டில் அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 650,000 பேர்கள் மருத்துவமனைப்பிணிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 75,000 பேர் மரணம் அடைந்துள்ளனர்.[1] வளங்கள் குறைவான வளர்ந்து வரும் நாடுகளில் இந்த எண்ணிக்கை அமெரிக்காவை விட அதிகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மருத்துவமனைப்பிணியைத் தவிர்க்க, பின்வரும் பரிந்துரைகளைப் பற்றி நோயாளிகளும் பொது மக்களும் அறிந்திருக்க வேண்டும்.[2,3]

 

# 1. மருத்துவமனைப்பிணிகளால் ஆபத்து இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவதால் மருத்துவமனைப்பிணிக்குப் பலியாகலாம் என்பது பலருக்குத் தெரியாது. அமெரிக்கா போன்ற சில நாடுகளில், இலவச வலைத்தளங்களிலிருந்து ஒரு மருத்துவமனையின் நுண்கிருமிப்பிணி மதிப்பெண்ணைத் தேடிக் கண்டறியலாம். அங்குத் தங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த தகவல்கள் கிடைக்கும்.

 

# 2. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பும் அறுவை சிகிச்சைக்கு முன்பும் குளிக்கவும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, “குளிக்க சிறப்பு சவர்க்காரம், துடைக்க உடற்நாசினி துடைப்பான்கள் ஆகியவை வேண்டுமா” என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்

 

# 3. கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்துங்கள், மக்களிடம் கைகளைக் கழுவச் சொல்லுங்கள்.

இது மிகவும் கடினம்! ஒருவரின் கைகளைக் கழுவச் சொல்வது அநாகரீகமான, முரட்டுத்தனமாக செயல் என்று உணரப்படலாம். (குறிப்பாக, நீங்கள் சுகாதாரப் பணியாளர்களுடன் பேசும் நோயாளியாக இருந்தால்). இருப்பினும், மருத்துவமனைப்பிணிகளைக் குறைப்பதற்கான சிறந்த வழி கைகளை அடிக்கடி கழுவி தூய்மையாக வைத்திருப்பதாகும். பல மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் கைகளைக் கழுவுதல் பற்றி மிகவும் வெளிப்படையாக இருப்பார்கள். கைகளைக் கழுவுவதை நினைவூட்டுமாறுகூட உங்களிடம் கேட்பார்கள்.

 

உங்கள் உறவினர்களும் சுகாதாரப் பணியாளர்களும் கைகளைக் கழுவ வேண்டும்: 

 

(அ) உங்களைத் தொடும் முன்;

(ஆ) எந்தவொரு சுகாதார நடைமுறைக்கு முன்;

(இ) எந்தவொரு உடல் திரவத்தையும் தொட்டப் பிறகு;

(ஈ) உங்களைத் தொட்ட பிறகு;

(உ) உங்கள் சுற்றுப்புறங்களைத் தொட்ட பிறகு.[4]

ஆகவே, இதைச் சொல்லத் தயங்காதீர்கள்: “மன்னிக்கவும், நீங்கள் கைகளைக் கழுவியதை நான் பார்க்கவில்லை. தயவுசெய்து மீண்டும் செய்வீர்களா?” என்று கோருங்கள்.

 

# 4. எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருங்கள்.

மருத்துவமனை சுற்றுசூழலைச் சுத்தமாக வைத்திருந்தால் நுண்கிருமிகள் பரவுவதைக் குறைத்து மருத்துவமனைப்பிணிகளைத் தடுக்கலாம்.

 

# 5. சிரைச்சாதனங்கள் மற்றும் வடிகுழாய்கள் இன்னும் தேவையா என்று விசாரிக்கவும்.

ஒவ்வொரு நாளும், சிரைச்சாதனங்கள், சிறுநீர் வடிகுழாய்கள் போன்ற உடலில் பொருத்தியிருக்கும் கருவிகளை அகற்ற முடியுமா என்றுக் கேளுங்கள். நீண்ட நாட்கள் அவை உடலுக்குள் சொருகி வைக்கப்பட்டிருந்தால் மருத்துவமனைப்பிணிக்கு ஆளாகும் ஆபத்து அதிகரிக்கும்.

 

# 6. கொல்லிகள் பற்றி கேளுங்கள்.

“கொல்லிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனவா? உங்களுக்கு அவை தேவையா?” என்று மருத்துவரைக் கேளுங்கள். கொல்லிகளின் அதிகப்படியான மற்றும் தவறான பயன்பாடுகள் மருத்துவமனைப்பிணிகளின் ஆபத்தை அதிகரிக்கும்.

 

# 7. வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்று கவனியுங்கள்.

உங்களின் மலம் தளர்வாக இருந்தால், தயவுசெய்து உங்கள் மருத்துவர்களிடம் தெரிவிக்கவும். இது மருத்துவமனைப்பிணியின் அறிகுறியாக இருக்கலாம்.

 

# 8. புகை பிடித்தலையும் மது அருந்துவதையும் நிறுத்துங்கள்.

மருத்துவமனைகளில் புகைபிடிக்கவோ மது அருந்தவோ அனுமதிக்கமாட்டார்கள்.   முடிந்தவரை சிகிச்சைக்கு முன்பே புகைபிடிப்பதையும் மது அருந்துவதையும் நிறுத்துவதால் மருத்துவமனைப்பிணியால் வரும் ஆபத்தைக் குறைக்கலாம்.

எந்தவொரு மருத்துவச் சிகிச்சைக்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றாலும், இந்த உதவிக்குறிப்புகள் ஒரு மருத்துவமனையிலோ அல்லது சுகாதார நிலையத்திலோ சிகிச்சை பெறும்போது மருத்துவமனைப்பிணிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவும்.

 

ஆதார நூற்பட்டியல்

[1]        உலக சுகாதார அமைப்பு (2016). தேசிய மற்றும் கடுமையான (திடீர்) சுகாதார வசதி மட்டத்தில் மருத்துவமனைப்பிணிகள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டங்களின் முக்கியக் கூறுகள் குறித்த வழிகாட்டுதல்கள். இவ்வலைத்தளத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.

World Health Organization (2016). Guidelines on core components of infection prevention and control programmes at the national and acute healthcare facility level. ISBN 978-92-4-154992-9

(https://www.who.int/gpsc/core-components.pdf)

 

[2]        நுகர்வோர் அறிக்கைகள். (2016). மருத்துவமனைப்பிணிகளைத் தடுப்பதற்கான 15 உதவிக்குறிப்புகள். இவ்வலைத்தளத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.

Consumer Reports. (2016). 15 Tips for Preventing Infections in the Hospital. Retrieved from https://www.consumerreports.org/hospital-acquired-infections/15-tips-for-preventing-infections-in-the-hospital/

 

[3]        மிஸ்ச்செல், இ. (2015, மே 13). மருத்துவமனைப்பிணிகளைத் தவிர்க்க நீங்கள் செய்யக்கூடிய 5 செயல்பாடுகள். இவ்வலைத்தளத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.

Mitchell, E. (2015, May 13). 5 Things You Can Do To Avoid A Hospital-Acquired Infection. Retrieved from http://blog.eoscu.com/blog/5-things-you-can-do-to-avoid-a-hospital-acquired-infection

 

[4]        உலக சுகாதார அமைப்பு (2013, மே 03). சுத்தமான பராமரிப்பு என்பது பாதுகாப்பானப் பராமரிப்பு. உயிர்களைக் காப்பாற்ற உங்கள் கைகளைச் சுத்தம் செய்யுங்கள். இவ்வலைத்தளத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது

World Health Organization (2013, May 03). Clean Care is Safer Care. About Save Lives: Clean Your Hands. Retrieved from

http://www.who.int/gpsc/5may/background/5moments/en/

Related words.
Word of the month
New word